vmtalks.com ⚡ AMP

பரமத்தி அருகே கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்.

By Editor | Sep 07, 2026

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டத்திற்குட்பட்ட கோலாரம் கிராமம் தாகாக்களரையில் தனியார் நிறுவனம் சார்பில் ‘கேஸ் பாட்லிங் பிளாண்ட் ’ அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோலாரம், செருக்கலை, லத்துவாடி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்கப்பட உள்ள பகுதிக்கு அருகாமையில் அரசு பள்ளிகள், குடியிருப்புகள், விவசாய நிலங்கள், கோழிப்பண்ணைகள் மற்றும் டிடிசிபி அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இந்த சூழலில் கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்கப்பட்டால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதுடன், விவசாயம் மற்றும் கோழிப்பண்ணை தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

அரசு பள்ளிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் கேஸ் பிளாண்ட் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், விவசாயிகள், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் மற்றும் மனைப்பிரிவு உரிமையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், தனியார் நிறுவனத்திற்கு கேஸ் பாட்லிங் பிளாண்ட் அமைக்க மாவட்ட நிர்வாகம் வழங்கியுள்ளதாக கூறப்படும் அனுமதியை உடனடியாக ரத்து செய்து, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.