vmtalks.com ⚡ AMP

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நாமக்கல்லில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

By Editor | Aug 09, 2026

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, வேலகவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் விவசாயியுமான என். பூபதி, தனது வீட்டில் இன்று தனிநபர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள பள்ளபாளையம் ஏரி, பெரியமணலி மற்றும் சேர்வம்பட்டி பெரியகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 ஏக்கர் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பூபதி வலியுறுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டினார். கடந்த ஓராண்டுக்கு முன்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதாகவும், அப்போது அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறிய பூபதி, பள்ளபாளையம் ஏரியில் சுமார் 24 ஏக்கர் நிலம் தனிநபர்கள் பெயரில் பட்டா செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், அங்கு மரங்கள் வெட்டப்பட்டு, போர்வெல் மற்றும் சோலார் வசதி அமைத்து விவசாயம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் புகார் தெரிவித்தார்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தனது போராட்டத்தை தொடர்ந்து நடத்துவேன் என பூபதி தெரிவித்துள்ளார்.