சேலம் மாவட்டம் ஏற்காடு அடிவாரத்தில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு, நாமக்கல் மாவட்டத்தின் வழியாக சுமார் 62 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து, நன்செய் இடையார் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் திருமணிமுத்தாற்றைச் சார்ந்த நீர்வழிப்பாதைகளில் ஒன்றான மதியம்பட்டி ஏரியில் இருந்து மல்லசமுத்திரம் ஏரிக்கு செல்லும் வாய்க்காலில் பொதுப்பணித்துறை சார்பில் தற்போது தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் வாய்க்காலை அதிக ஆழம் மற்றும் அகலத்துடன் அமைத்து, இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
வாய்க்காலின் கொள்ளளவு அதிகரிப்பதால் மல்லசமுத்திரம் ஏரிக்கு அதிக அளவில் தண்ணீர் செல்லும் நிலை ஏற்படும் என்றும், இதனால் திருமணிமுத்தாற்றை நம்பியுள்ள 15-க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் வறண்டு போகும் அபாயம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட திருமணிமுத்தாறு பாசன விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள், மாவட்ட ஆட்சியர் மதுபாலனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
மேலும், வாய்க்கால் தூர்வாரும் பணியின்போது நீர்வழிப்பாதையின் இயல்பான தன்மை பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றும், திருமணிமுத்தாற்றை நம்பியுள்ள அனைத்து ஏரிகளுக்கும் உரிய முறையில் சமமான அளவில் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.