நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களை அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க அதிகாரிகள் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்ததாக 2 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் (பொறுப்பு) தலைமையில், மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மதுபாட்டில்களில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி. விலைக்கு மட்டுமே மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், மொத்தமாக விற்பனை செய்தல் மற்றும் பணியில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில், மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்தது மற்றும் பணியில் குறைபாடு இருந்தது கண்டறியப்பட்டதால், நாமக்கல் பகுதி டாஸ்மாக் கடை விற்பனையாளர் பாலமுருகன் மற்றும் ராசிபுரம் பகுதி உதவி விற்பனையாளர் சுந்தரம் ஆகிய 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.