நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட முதலைப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே, நகருக்குச் செல்லும் பிரதான சாலையில், நகரை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில் இரண்டு சாலைகளுக்கு நடுவே ரவுண்டானா அமைக்கப்படுகிறது.
நாமக்கல் நகரின் நுழைவு வாயிலாக அமைந்துள்ள இப்பகுதியில், வெளியூர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கும் வகையிலும், நாமக்கல் முட்டை உற்பத்திக்கு புகழ்பெற்ற நகரம் என்பதை வெளிப்படுத்தும் வகையிலும் ரவுண்டானா வடிவமைக்கப்படுகிறது.
இதற்காக ரவுண்டானாவில் கான்கிரீட்டால் உருவாக்கப்பட்ட முட்டை வடிவ அலங்கார பொம்மைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், ரவுண்டானாவை சுற்றிலும் பசுமையான புல்வெளி மற்றும் அலங்கார செடிகள் வளர்க்கப்பட உள்ளன.
புதிய பஸ் ஸ்டாண்ட் நுழைவு வாயிலில் அமைக்கப்படும் இந்த அலங்கார ரவுண்டானா, நாமக்கல் நகருக்குள் வருபவர்களை வரவேற்கும் வகையில் அமையும் என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.