vmtalks.com ⚡ AMP

வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாமக்கல்லில் இடதுசாரிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

By Editor | Oct 01, 2026

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்களும் கூட்டாக ஒருமனதாக முடிவெடுத்து செயல்பட வேண்டும் என்றும், கருத்து வேறுபாடு ஏற்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மை கருத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என்றும் உள்ள நடைமுறைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் மீறியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் கருத்துகள், ஆட்சேபணைகள் மற்றும் எதிர்ப்புகளை புறக்கணித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் செயல்பட்டதாகவும், மத்திய ஆளும் கட்சியின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதாகவும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றம்சாட்டினர்.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைமுறைகளை நிலைநிறுத்தவும், வாக்காளர்களின் வாக்குரிமையை பாதுகாக்கவும் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரண்டு ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறை எழுத்துப்பூர்வமாக தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், வாக்காளர் பதிவு செய்வதற்கான படிவம் 6-ல் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் தேர்தல் வாக்காளர் பட்டியல் மென்பொருளை மையப்படுத்துதல் உள்ளிட்ட முடிவுகளுக்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினர்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான கட்டுப்பாடுகள் மையப்படுத்தப்படுவது குறித்து இரண்டு தேர்தல் ஆணையர்களும் மத்திய அமைச்சரவை செயலாளரிடம் முறையிட்டதாகவும், அவர்களின் ஆட்சேபணைகள் புறக்கணிக்கப்பட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் விளைவாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் பெயர்கள் நீக்கப்பட்டதன் மூலம் தேர்தல் ஆணையத்தின் மீதான மக்களின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி தலைமை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் க. அன்புமணி, செல்வராஜ், சிவகுமார், சிபிஐஎம்எல் கட்சியைச் சேர்ந்த பெரோஷ்பாபு, கோவிந்தராஜ், வெங்கடேசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். அசோகன், ந. வேலுச்சாமி, கே. தங்கமணி, சு. சுரேஷ், எம்.ஆர். முருகேசன், நாமக்கல் பிரதேச குழு செயலாளர் கு. சிவராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.