தமிழ் மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், அதனை மீட்டெடுத்து பாதுகாக்கும் நோக்கில் ‘இனித் தமிழ் இயக்கம்’ முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்தார்.
நாமக்கல்லில் நடைபெற்ற ‘இனித் தமிழ் இயக்கம்’ சார்பில் தமிழில் கையெழுத்திடும் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று சகாயம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு சமஸ்கிருத ஆதிக்கம் காரணமாக தமிழ் மொழியின் பயன்பாடு மங்கியிருந்தது. இருப்பினும், கிரேக்க மற்றும் இலத்தீன் மொழிகளுக்கு இணையான இலக்கண வளம் கொண்ட மொழியாக தமிழ் திகழ்கிறது. 1916-ஆம் ஆண்டு மறைமலை அடிகளார் தனித்தமிழ் இயக்கத்தை தொடங்கினார். தற்போது 110 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ் மொழியை பாதுகாக்கும் இயக்கத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான வாய்ப்புகள் கிடைத்தாலும், அவற்றை ஒதுக்கிவிட்டு தமிழ் பணிக்காக வந்துள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதி தங்களது இலக்கு அல்ல; ‘இனித் தமிழ் இயக்கம்’ என்பதே தங்களது இலக்கு.
தாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. குறிப்பாக இந்தி மொழிக்கு எதிரானவர்கள் இல்லை. ஆனால் எந்த மொழியையும் மற்றொரு மொழி மீது திணிப்பதை எதிர்க்கிறோம்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு ‘மம்மி’, ‘டாடி’ போன்ற வார்த்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. இதற்கு மாறாக தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழில் திரைப்படங்களுக்கு பெயர் வைப்பது, அரசு அலுவலகங்களில் தமிழில் ஆவணங்களை பயன்படுத்துவது, பொதுமக்கள் தமிழில் கையெழுத்திடுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தமிழ் பயன்பாட்டை மேலும் அதிகரிக்க வேண்டும்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், தமிழ் மொழியின் பயன்பாடு குறைந்து வருவதை தடுக்கவும், தமிழை மீட்டெடுக்கவும் ‘இனித் தமிழ் இயக்கம்’ தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க பொதுமக்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும். லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் அரசு நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் அனைத்து ஆவணங்களும் தமிழில் இடம்பெறுவதையும், அனைவரும் தமிழில் கையெழுத்திடுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சகாயம் தெரிவித்தார்.
ஒவ்வொரு வாக்காளரும் அரசியலில் பங்கேற்பவர்கள்தான். அந்த வகையில் தானும் அரசியலில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இயற்கை வளங்களை சுரண்டுபவர்களுக்கு எதிராகவும், நல்லவர்களுக்கு ஆதரவாகவும் வாக்களிக்க வேண்டும் என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முடியும் என்ற நிலை கடந்த சட்டமன்றத் தேர்தலில் மாறியுள்ளதாகவும், பண பலம் இல்லாமல் வெற்றி பெற்றதே அதற்கு சாட்சி என்றும் சகாயம் தெரிவித்தார்.