vmtalks.com ⚡ AMP

41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தக் கோரி நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

By Editor | Aug 18, 2026

நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் கோரிக்கை மனு அனுப்பும் இயக்கத்தை மேற்கொண்டனர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சார்பில், நாமக்கல்–மோகனூர் சாலையில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் த.ஜாகீர் உசேன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் இளங்கோவன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்க வேண்டும், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த சாலைப்பணியாளர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும், கிராமப்புற இளைஞர்களை சாலைப்பணியாளர்களாக நியமிக்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளை அரசே மேற்கொள்ள வேண்டும், தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பும் இயக்கமும் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.பழனிசாமி, மாவட்ட செயலாளர் சி.வேலு மற்றும் மாவட்ட, வட்டக்கிளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.