நாமக்கல் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு முடித்தும் இதுவரை உயர்கல்வியில் சேராத மாணவர்கள், கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவி தேவைப்பட்டால் 1800 599 4286 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என நாமக்கல் கலெக்டர் மதுபாலன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் உயர்கல்வி சேர்க்கை மற்றும் வழிகாட்டுதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் மதுபாலன் தலைமை வகித்தார்.
இதில் நாமக்கல், கொல்லிமலை, மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம், புதுச்சத்திரம் மற்றும் கபிலர்மலை ஒன்றியங்களைச் சேர்ந்த 68 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு கல்லூரிகளில் உயர்கல்வி சேர்க்கை பெறவும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் கல்விக்கடன் பெறவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான உதவிகள் வழங்கப்படும்.
மேலும், முகாமில் பங்கேற்காத மாணவர்களை கள ஆய்வு மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அவர்கள் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்கை பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
உயர்கல்வியில் சேர்வதற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், மாவட்ட கலெக்டர் அல்லது முதன்மைக் கல்வி அலுவலரை 1800 599 4286 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற மாணவர்களில் 2 பேருக்கு அரசு ஐ.டி.ஐ., 6 பேருக்கு பாலிடெக்னிக் கல்லூரி, 7 பேருக்கு அரசு கலைக் கல்லூரி என மொத்தம் 15 மாணவர்களுக்கு உடனடி சேர்க்கைக்கான உத்தரவுகளை கலெக்டர் வழங்கினார்.
மேலும், உயர்கல்வி பயின்று வரும் 14 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைக்காக மாவட்ட சமூக பொறுப்பு நிதியிலிருந்து ரூ.60,239 மதிப்பிலான உதவித்தொகையும் வழங்கப்பட்டது.