vmtalks.com ⚡ AMP

நாமக்கல் மாவட்டத்தில் குரூப்-1, குரூப்-1ஏ தேர்வு – 4,506 பேர் தேர்வு எழுதினர்.

By Editor | Sep 27, 2026

 

நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ போட்டித்தேர்வு இன்று நடைபெற்றது.

நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள டிரினிட்டி மகளிர் கல்லூரி மற்றும் பாப்பிநாயக்கன்பட்டியில் உள்ள ஸ்ரீ செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் மதுபாலன் நேரில் சென்று தேர்வு நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், பார்வைத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு தேர்வு எழுத உதவி செய்து வருவதையும் மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 19 தேர்வு மையங்களில் 5,809 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தேர்வர்கள் காலை 6 மணி முதல் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

தேர்வுப் பணிகளுக்காக 4 நடமாடும் குழுவினர், 6 கண்காணிப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பறக்கும் படையினர் மற்றும் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இன்று நடைபெற்ற தேர்வில் 4,506 பேர், அதாவது 77.57 சதவீதம் பேர் தேர்வு எழுதினர். 1,303 பேர் தேர்வுக்கு வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.