vmtalks.com ⚡ AMP

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தக் கோரி நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம்.

By Editor | Aug 25, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் நாகேஸ்வரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 250-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

தற்போது வருவாய்த்துறை மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகையைப் போன்று, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

மேலும், புதியதாக உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்துள்ள ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஆய்வு செய்து, உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தப்படவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.