vmtalks.com ⚡ AMP

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் இன்று முதல் போட்டோ, வீடியோ எடுக்க தடை.

By Editor | Sep 01, 2026

 

நாமக்கல் நகரின் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், பக்தர்கள் செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம், வீடியோ எடுக்க இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து சாமி தரிசனம் செய்யும் வகையில் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

நாமக்கல் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயிலில், 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் இரு கைகளையும் கூப்பிய நிலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயில் வளாகத்திற்குள் ஆஞ்சநேயர் சுவாமியை செல்போன் மற்றும் கேமரா மூலம் புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்காக கோயில் வளாகத்தில் தனியாக செல்போன் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் சுமார் 120 செல்போன்களை பாதுகாப்பாக வைக்கும் வகையில் தனித்தனி அடுக்குகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்து விட்டு கோயிலுக்குள் செல்லலாம். இதற்காக ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தரிசனம் முடிந்ததும் செல்போனை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, ஆஞ்சநேயர் சுவாமி திறந்தவெளியில் அமைந்துள்ளதால், கோயிலுக்கு வெளியே இருந்தபடியே செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.

மேலும், கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் கோயில் வளாகத்தில் சுவாமியை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடும் நிகழ்வுகளையும் கட்டுப்படுத்துவது குறித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.