நாமக்கல் மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன ஏஐ கேமராக்கள் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகின்றன. இதன் மூலம் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சேலம் சாலை – திருச்செங்கோடு சாலை சந்திப்பில் கடந்த மாதம் 4 அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் செயற்கை நுண்ணறிவு ANPR (Automatic Number Plate Recognition)) தொழில்நுட்பத்தில் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த கேமராக்கள் மூலம்,
- ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது
- இருசக்கர வாகனத்தில் 3 பேர் செல்வது
- செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது
- சீட் பெல்ட் அணியாமல் கார் உள்ளிட்ட வாகனங்களை இயக்குவது
உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் கண்காணிக்கப்படும்.
விதிமீறல்கள் கேமராவில் பதிவானதும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஆன்லைன் மூலம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் ஏற்கனவே ஏஐ கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. தற்போது நாமக்கல்லிலும் இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் போக்குவரத்து விதிகளை வாகன ஓட்டிகள் முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க முடியும் என காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.