vmtalks.com ⚡ AMP

அரசு கார் வேண்டாம் என கூறும் எம்எல்ஏக்களுக்கு அந்த நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்க்க வேண்டும்.

By Editor | Aug 22, 2026

அரசு கார் தேவையில்லை என தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கு, காருக்காக ஒதுக்கப்படும் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டசபையில் எம்எல்ஏக்களுக்கு அரசு சார்பில் கார் வழங்குவது தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்நிலையில், தங்களுக்கு அரசு கார் தேவையில்லை என சில எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். இதை தமிழக அரசு ஆக்கபூர்வமான கருத்தாக எடுத்துக்கொள்ள வேண்டும். அரசு கார் தேவையில்லை என தெரிவித்த எம்எல்ஏக்களை சட்டசபையில் பாராட்ட வேண்டும்.

மேலும், அரசு கார் தேவையில்லை என தெரிவிக்கும் எம்எல்ஏக்களுக்கு, காருக்காக ஒதுக்கப்படும் நிதியை அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியுடன் சேர்த்து வழங்க வேண்டும். அந்த நிதியை தொகுதியில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக எம்எல்ஏக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எம்எல்ஏக்கள் அரசு கார் பெறுவதை தவிர்ப்பதை, தமிழக அரசுக்கு எதிரான விமர்சனமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அவர்களின் முடிவை மக்கள் நலனுக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையாக அரசு கருத வேண்டும் என ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.