உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகைப்பட கலைஞர்கள் கேக் வெட்டியும், ஒருவருக்கொருவர் கேக் ஊட்டியும், குழு புகைப்படம் எடுத்தும் உற்சாகமாக கொண்டாடினர். மேலும், புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றும், புகைப்படத் தொழிலுக்கான மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
ஆகஸ்ட் 19, 1839-ம் ஆண்டு பிரெஞ்சு அரசு டாகியோடைப் எனப்படும் புகைப்பட முறையை உலகிற்கு இலவசமாக வழங்கியதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் உலக புகைப்பட தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி, திருச்செங்கோடு வட்டார புகைப்பட கலைஞர்கள் சங்கம் சார்பில், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
பொதுவாக மற்றவர்களை புகைப்படம் எடுக்கும் புகைப்பட கலைஞர்கள், இந்த நாளில் தாங்களே குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். மேலும், “ஹேப்பி வேர்ல்ட் போட்டோகிராபி டே” என உற்சாகமாக முழக்கமிட்டு, ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி உலக புகைப்பட தினத்தை உற்சாகமாக கொண்டாடினர்.
தனி நல வாரியம் அமைக்க கோரிக்கை
இதுகுறித்து சங்கத் தலைவர் செந்தில் கூறுகையில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.
புகைப்பட கலைஞர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல்வேறு அரசுகளிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், தற்போதைய அரசிடமும் இந்த கோரிக்கையை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், கேமரா, பிரிண்டிங் உள்ளிட்ட புகைப்படத் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால், அவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பரத், பொருளாளர் மனோஜ், சங்க முன்னாள் மாநில தலைவர் மாதேஸ்வரன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட புகைப்பட கலைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.