திருச்செங்கோடு அருகே லாரியின் சேஸ்சில் துளையிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ட்ரில்லிங் மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் பட்டறை தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
குமாரபாளையம் தண்ணீர்பந்தல்பாளையம் விநாயகர் நகரைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் கார்த்தி (44). இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். கார்த்தி, திருச்செங்கோடு அடுத்த கருவேப்பம்பட்டியில் உள்ள லாரி பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், நேற்று பட்டறைக்கு அருகில் உள்ள மற்றொரு பட்டறைக்கு லாரியின் சேஸ்சில் துளையிடும் பணிக்காக கார்த்தி சென்றுள்ளார். அங்கு ட்ரில்லிங் மிஷினில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மிஷினில் இருந்து மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதில் தூக்கி வீசப்பட்ட கார்த்தி, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கார்த்தி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.