திருச்செங்கோட்டில் பியூட்டி பார்லர் உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை திருடியதாக 52 வயது நபரை போலீசார் கைது செய்தனர். சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை நடத்தி அவரை போலீசார் பிடித்தனர்.
திருச்செங்கோடு மாங்குட்டைபாளையத்தைச் சேர்ந்த கௌசல்யா (32), அண்ணா சாலையில் உள்ள மெடிக்கல் ஸ்டோர் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் திருச்செங்கோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், செங்கோடம்பாளையம் பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ரத்தினம் (52) என்பவர் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கு பதுங்கியிருந்த ரத்தினத்தை கைது செய்து, திருடப்பட்ட இருசக்கர வாகனத்தையும் மீட்டனர்.
ஏற்கனவே போலீஸ் வேடத்தில் வசூல்
கைது செய்யப்பட்ட ரத்தினம் ஏற்கனவே போலீஸ் போல் வேடமணிந்து சாலையில் சென்ற வாகனங்களை நிறுத்தி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை பெற்றவர் என போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து ரத்தினத்தை போலீசார் திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ரங்கராஜன், அவரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து ரத்தினம் சிறையில் அடைக்கப்பட்டார்.