vmtalks.com ⚡ AMP

போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் குறித்து அவதூறு பதிவு: காவல் நிலையத்தில் புகார்.

By Editor | Sep 02, 2026

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் முகூர்த்த நாட்களில் நூற்றுக்கணக்கான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். திருமண நிகழ்வுகளை பதிவு செய்வதற்காக போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கோயிலுக்குள் செல்போன் மற்றும் கேமராக்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள சூழலில், திருமண நிகழ்வுகளை பதிவு செய்யச் செல்லும் போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவுகள் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

பெயர் குறிப்பிடாமல், ஊர் பெயரை மட்டும் குறிப்பிட்டு செயல்படும் முகநூல் பக்கத்தில் தங்களது தொழிலை இழிவுபடுத்தும் வகையிலும், போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்களை அவதூறாக சித்தரிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கோயில் நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அனுமதிக்காத பகுதிகளில் தாங்கள் எந்தவிதமான புகைப்படம் அல்லது வீடியோ பதிவுகளையும் மேற்கொள்வதில்லை என்றும், தங்கள் தொழிலை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பதிவுகள் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் போட்டோகிராபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் கூறினர்.

இதுதொடர்பாக திருச்செங்கோடு வட்டார வீடியோ மற்றும் போட்டோகிராபர்கள் நலச்சங்கத் தலைவர் செந்தில் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில், தங்களைப் பற்றி அவதூறாக வெளியிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும், சம்பந்தப்பட்ட முகநூல் பக்கத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பதிவை வெளியிட்ட நபரை கண்டறிந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர்.