நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சி 6-வது வார்டு சேலம் ரோடு முனியப்பன் கோயில் அருகே வசித்து வருபவர் ஆனந்தகுமார் (55). இவர் தனது பகுதியில் தூய்மை பணிக்கு வரும் பணியாளர்களிடம் அடிக்கடி குறை கூறி வந்ததாக தெரிகிறது. மேலும், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் புகார் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை ஆனந்தகுமார் வீட்டின் அருகே உள்ள சாக்கடையை தூய்மை செய்வதற்காக நகராட்சி தூய்மை பணியாளர் வடிவேலு சென்றுள்ளார். சாக்கடை அடைப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக மட்டுமே வந்திருந்ததால், பாதுகாப்பு உபகரணங்களை உடன் கொண்டு வரவில்லை என்றும், அவற்றை எடுத்துக்கொண்டு வந்து பின்னர் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்வதாக வடிவேலு தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆனந்தகுமார் எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் எதற்காக பணிக்கு வந்தீர்கள் எனக் கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், வடிவேலுவை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடிவேலு சக தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தூய்மை பணியாளர்கள் ஒன்று திரண்டு, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகளுடன் திருச்செங்கோடு நகர காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தனர்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஆனந்தகுமாரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருச்செங்கோடு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்தால் காவல் நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.