திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலகத்தில் (பாலிடெக்னிக்) ‘பாலிபியஸ்டா’ விழா நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
விழாவில் தொழில்நுட்ப கருத்தரங்கு, ப்ராஜெக்ட் எக்ஸ்போ, கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, மின்சார வாகனங்கள், பசுமை தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், 6ஜி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தங்களது படைப்புகளை சமர்ப்பித்து விளக்கினர்.
கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன், துணைத்தலைவர் கே.எஸ்.சச்சின் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில், கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக முதல்வர் டாக்டர் பி.கோபிநாத் சிறப்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற டாக்டர் சரத் அசோகன், தொழில்நுட்ப அறிவுடன் செய்முறை அறிவும் மாணவர்களுக்கு அவசியம் என்றும், தொழில்நுட்பத் திறனை வெளிப்படுத்தும் திறனும் வேலைவாய்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் தெரிவித்தார்.
பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கிரிக்கெட்டில் கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பப் பயிலக அணியும், வாலிபாலில் தியாகராஜர் பாலிடெக்னிக் அணியும், கபடியில் சக்தி பாலிடெக்னிக் அணியும் முதலிடம் பெற்றன.
விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.