திருச்செங்கோடு அருகே பேக்கரி கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்த ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக திருச்செங்கோடு ரூரல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் ஆண்டிபாளையம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கிருஸ்டி மில் அருகே செயல்பட்டு வரும் பேக்கரி கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
தொடர்ந்து கடையில் போலீசார் சோதனை நடத்தியபோது, விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அரசின் தடையை மீறி குட்கா விற்பனை செய்ததாகக் கூறி, பேக்கரி கடையின் உரிமையாளர் மொய்தீன் என்பவரை திருச்செங்கோடு ரூரல் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.