vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோடு அருகே 4 மாணவிகள் உயிரிழந்த விபத்து: தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநர் கைது.

By Editor | Sep 04, 2026

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே சக்கராம்பாளையம் பிரிவு பகுதியில் 4 மாணவிகள் உயிரிழந்த சாலை விபத்து தொடர்பாக, தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை எலச்சிபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலச்சிபாளையம் அடுத்த சக்கராம்பாளையம் பிரிவு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற 4 மாணவிகள் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 4 மாணவிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, விபத்து குறித்து எலச்சிபாளையம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் அடிப்படையில், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் தனியார் கல்லூரி பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் ராசிபுரம் தாலுகா, ஒடுவன்குறிச்சி அருகே உள்ள சீராப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் முருகன் என்கிற பிரவீன் (23) என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மீது பி.என்.எஸ். 281 – அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் மற்றும் பி.என்.எஸ். 106 – அலட்சியத்தால் மரணம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் எலச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்ந்து, கைது செய்யப்பட்ட பேருந்து ஓட்டுநர் பிரவீனிடம் விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.