vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ பைக் ரைடர் வாகனங்கள் பறிமுதல்; ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்த ஆர்.டி.ஓ.

By Editor | Aug 07, 2026

திருச்செங்கோட்டில் ரேப்பிடோ (Rapido) செயலி மூலம் இயங்கியதாகக் கூறப்படும் இருசக்கர வாகனங்களை ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்து புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு வாகனங்களுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்செங்கோட்டில் கடந்த சில நாட்களாக ரேப்பிடோ செயலி மூலம் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் இயங்கி வருவதாகவும், இதனால் ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அம்மையப்பா அனைத்து ஆட்டோ, கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நகரப் பகுதிகளில் ரேப்பிடோ பைக் சேவைக்கு தடை இருப்பதாக கூறப்படும் நிலையில், உரிய அனுமதியின்றி வாகனங்கள் இயக்கப்படுவதாகவும், இதுகுறித்து இரண்டு நாட்களுக்கு முன்பு இரண்டு வாகனங்களை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா மற்றும் ஆய்வாளர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் ஒப்படைத்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, பஜாஜ் இருசக்கர வாகனமும், டி.வி.எஸ். இவி ஸ்கூட்டரும் ரேப்பிடோ சேவையில் இயங்கியதாகக் கூறி, ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் அந்த வாகனங்களை பிடித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு வந்து புகார் மனு அளித்தனர்.

ரேப்பிடோ சேவையால் சுமார் 500 குடும்பங்களைச் சேர்ந்த ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், சட்டவிரோதமாக இயங்கும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

புகார் மனுவை பெற்றுக்கொண்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா, சம்பந்தப்பட்ட இரண்டு வாகனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, தலா ரூ.12 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதம் விதித்தார். மேலும், அந்த வாகனங்களை நகர காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

சட்ட விதிகளுக்கு புறம்பாக ரேப்பிடோ உள்ளிட்ட வாடகை இருசக்கர வாகன சேவைகள் இயங்குவதாக தகவல் கிடைத்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மோகனப்பிரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.