vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் தேசிய கைத்தறி தின விழா; நெசவாளர்களுக்கு ரூ.10.34 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

By Editor | Aug 07, 2026

திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் திருமண மாளிகையில், தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறை, திருச்செங்கோடு சரகம் சார்பில் 12-வது தேசிய கைத்தறி தின விழா இன்று  நடைபெற்றது.

விழாவையொட்டி, கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த இராசிபுரம் பட்டுச் சேலைகள், சின்னப்பம்பட்டி மற்றும் ஆர்.புதுப்பாளையம் பருத்திச் சேலைகள், பவானி ஜமக்காளங்கள், சென்னிமலை போர்வைகள், துண்டுகள், மேட் உள்ளிட்ட ஜவுளிப் பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை முகாம் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், நெசவாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமும் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் விழாவில் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, 16 நெசவாளர்களுக்கு மொத்தம் ரூ.10.34 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதில், கைத்தறி நெசவாளர் முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சம், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.5.34 லட்சம் வழங்கப்பட்டது. மேலும், குடும்ப ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு மாதம் ரூ.1,200 வழங்குவதற்கான ஆணையும் வழங்கப்பட்டது.

1905-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தை நினைவுகூரும் வகையிலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி தொழிலின் பங்களிப்பை சிறப்பிக்கும் வகையிலும், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.