திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்பிலி கிராமத்தில் உள்ள அருந்ததியர் தெருவில் வசிக்கும் 35-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த ஐந்து ஆண்டுகளாக மழைநீர் சூழ்ந்து குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
சாலைகள் சேதமடைதல், வீடுகள் இடிந்து விழுதல், பாம்புகள் நடமாட்டம் மற்றும் குழந்தைகளுக்கு தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் அவதிப்படும் பொதுமக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் போது, 100-க்கும் மேற்பட்டோர் ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
தங்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என பொதுமக்கள் உறுதிபட தெரிவித்தனர். இதையடுத்து திருச்செங்கோடு தாசில்தார் ராஜா, எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் சுதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.