vmtalks.com ⚡ AMP

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்க வேண்டும் – விவசாய தொழிலாளர் சங்க மாநாட்டில் தீர்மானம்.

By Editor | Sep 04, 2026

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அனைவருக்கும் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை வழங்குவதுடன், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட 9-வது மாநாடு திருச்செங்கோடு சூரியம்பாளையம் செங்குந்தர் சமுதாய நலக்கூடத்தில் உள்ள தோழர் பி. செங்கோடன் நினைவரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி. துரைசாமி தலைமை வகித்தார். மூத்த தலைவர் ரத்தினம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்ட துணைத்தலைவர் சி.என். முருகேசன் வரவேற்புரை ஆற்றினார்.

அகில இந்திய கவுன்சில் உறுப்பினர் ஜி. கணபதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் வி.பி. சபாபதி வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.

மாநாட்டில் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கந்தசாமி, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தென் மண்டல இணைச் செயலாளர் எம். கணேசபாண்டியன், சி..டி.யு. மாவட்ட தலைவர் எம். அசோகன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் . ஆதிநாராயணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

நிறைவாக மத்திய செயற்குழு உறுப்பினர் . பழனிசாமி புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி நிறைவுரையாற்றினார். பெண் விவசாய தொழிலாளர் ஒன்றிய செயலாளர் சித்ரா நன்றி கூறினார்.

புதிய நிர்வாகிகள் தேர்வு

மாநாட்டில் 23 பேர் கொண்ட புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்ட தலைவராக எம். நடேசன், செயலாளராக சி. துரைசாமி, பொருளாளராக பி. செல்வராஜ், துணைத்தலைவர்களாக சு. சுரேஷ், சி. செல்லம், துணை செயலாளர்களாக ஆர். கோவிந்தசாமி, எம். தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

முக்கிய தீர்மானங்கள்

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளுடன், நாமக்கல் மாவட்டத்தில் 230 நாற்றங்கால் மையங்கள் உருவாக்கி தொழிலாளர்களுக்கு ரூ.275 கூலி வழங்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாட்கள் வேலை மற்றும் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலியை உறுதி செய்ய வேண்டும். பணியாளர்களுக்கு உரிய காலத்தில் ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், பணியின்போது விபத்து ஏற்பட்டால் மருத்துவ உதவி கிடைக்கும் வகையில் ஒன்றிய அளவில் மருத்துவரை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மாவட்டம் முழுவதும் நிலமற்றவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். தொப்பம்பட்டி, பள்ளக்காபாளையம், தட்டாங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளாக வீட்டு மனை கேட்டு போராடி வரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சார்பில் வழங்கப்பட்ட 34 வீட்டுமனை பட்டாக்களுக்கு உரிய இடத்தை அளந்து பயனாளிகளுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மோடமங்கலம் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டும். கைரேகை பதிவு ஏற்படவில்லை என்ற காரணத்தைக் கூறி விவசாய தொழிலாளர் பெண்களை ரேஷன் கடைகளில் பொருட்கள் பெறுவதில் இருந்து தடுக்கக் கூடாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தேவையான ஊசி, மருந்துகளை இருப்பில் வைத்து பொதுமக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

திருச்செங்கோடு நகராட்சியில் குடிநீர் மற்றும் வீட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும். திருச்செங்கோடு சட்டமன்ற அலுவலகம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி முன்பாக மழைக்காலங்களில் தேங்கும் மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.