vmtalks.com ⚡ AMP

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டுக்கு புதிய மருத்துவத் திட்டங்கள்: சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு.

By Editor | Aug 17, 2026

2026–27ம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்செங்கோடு தொகுதியின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு புதிய வசதிகள்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் Patient Experience Improvement Initiative செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை பெறுவதற்கான வழிகாட்டி அறிவிப்புப் பலகைகள், காத்திருப்பு வசதிகள், சுகாதாரமான கழிப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முக்கிய திட்டங்கள்

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.05 கோடி மதிப்பில் புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

மேலும், தாய்-சேய் நலச் சேவைகளை மேம்படுத்த புதிய தாய்-சேய் நலக் கட்டிடம் அமைக்கப்பட உள்ளது.

‘நலம் 360′ முழு உடல் பரிசோதனை மையம், புதிய கேத் லேப், முதல் நிலை செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் இந்திய மருத்துவ முறை கருத்தரிப்பு சிகிச்சை மையம் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளன.

முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான விடுதியில் ரூ.25.3 கோடி மதிப்பில் கூடுதல் தளங்கள் கட்டப்பட உள்ளன. மேலும், மருத்துவ ஆராய்ச்சியை மேம்படுத்த Clinical Epidemiology Unit அமைக்கப்பட உள்ளது.

பல்வேறு மருத்துவத் துறைகளுக்கு தேவையான உயர்தர மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன.

மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும் திட்டங்கள்

நாமக்கல் நகரில் உள்ள கோட்டை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 24 மணி நேரமும் செயல்படும் நகர்ப்புற சமுதாய சுகாதார மையமாக தரம் உயர்த்தப்பட உள்ளது.

ராசிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் CT Scan வசதி அமைக்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை (COPD) ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க ‘சுவாசம்‘ மையம் அமைக்கப்பட உள்ளது.

பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு Computed Radiography (CR) கருவி வழங்கப்பட உள்ளது.

கர்ப்பிணிகளுக்கு புளூடூத் ரத்த அழுத்தக் கருவி

நாமக்கல் மாவட்டத்தில் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உடல்நிலையை வீட்டிலிருந்தபடியே கண்காணிக்கும் வகையில், மருத்துவமனைக்கு தரவுகளை அனுப்பக்கூடிய Bluetooth BP Apparatus கருவிகள் வழங்கப்பட உள்ளன.

மேலும், மாவட்டத்தில் எடுக்கப்படும் CT Scan, MRI மற்றும் டிஜிட்டல் X-Ray படங்களை மின்னணு முறையில் சேமித்து, தொலைதூர மருத்துவ நிபுணர்களுடன் பகிர்ந்து சிகிச்சை அளிக்கும் வகையில் Centralized PACS திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த அறிவிப்புகள் மூலம் நாமக்கல் மாவட்டம் மற்றும் திருச்செங்கோடு பகுதி அரசு மருத்துவமனைகளின் சிகிச்சை வசதிகள், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.