இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத வகையில், போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சுமார் 1,500 கிலோ போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் வட்டம் கொன்னையாறு கிராமத்தில், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
பல்வேறு துறைகளின் திட்டங்கள் குறித்து விளக்கம்
மக்கள் தொடர்பு முகாமில் அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் மற்றும் மகளிர் உரிமைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, தோட்டக்கலை மற்றும் மழைப்பயிர் பாதுகாப்புத்துறை, பட்டுவளர்ப்புத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள், திடக்கழிவு மேலாண்மைத்துறை, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொரு அரங்காகச் சென்று பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்கள் குறித்து ஆட்சியர் மதுபாலன் கேட்டறிந்தார்.
மேலும், திட்டங்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்து பொதுமக்களுக்கு உரிய விளக்கம் அளிக்குமாறு துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
முகாமில் பேசிய ஆட்சியர் மதுபாலன், குழந்தைகளுக்கு ஆறு வயதிற்குள் ஏற்படும் வளர்ச்சி வாழ்நாள் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு தேவையான சத்தான உணவு, மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு வழங்கி வருவதாக தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காகவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்