vmtalks.com ⚡ AMP

மல்லசமுத்திரத்தில் வீடுகளுக்கே மதுபானம் ‘டோர் டெலிவரி’? வைரலாகும் வீடியோவால் பரபரப்பு

By Editor | Sep 28, 2026

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், செல்போனில் தொடர்பு கொண்டால் வீடுகளுக்கே மதுபானங்களை ‘டோர் டெலிவரி’ செய்வதாகவும் கூறப்படும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், பொன்னியாறு ஓடை பகுதியில் மதுபானம் விற்பனை செய்வதாக கூறப்படும் நபரிடம், போலீசாருக்கு தெரியாமல் எப்படி விற்பனை செய்கிறீர்கள் என ஒருவர் கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு அந்த நபர், மதுவிலக்கு போலீசாருக்கு மாதம் ரூ.10 ஆயிரம் மாமூல் கொடுப்பதாகவும், உள்ளூர் போலீசாருக்கும் அவ்வப்போது பணம் கொடுப்பதாகவும் கூறும் வகையில் பேசியதாக அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூற்று உண்மையா என்பது குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளது.

அதிகாலை முதல் சட்டவிரோத விற்பனை?

மல்லசமுத்திரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு முன்பாக அதிகாலை நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு வாங்கி, செல்போனில் தொடர்பு கொள்ளும் நபர்களுக்கு இருசக்கர வாகனங்களில் கொண்டு சென்று வழங்குவதாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் மதுபானத்துடன் பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர், ஊறுகாய் உள்ளிட்டவற்றையும் சேர்த்து வழங்குவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜி-பே, போன்-பே உள்ளிட்ட டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் மூலமாகவும் பணம் பெறப்படுவதாக கூறப்படுகிறது.

பல்வேறு பகுதிகளில் விற்பனை?

மல்லசமுத்திரம் பஸ் ஸ்டாண்ட், சேலம் ரோடு, பீமரப்பட்டி பிரிவு, டாக்டர் சுப்பராயன் ரோடு, வையப்பமலை ரோடு, சூரியகவுண்டம்பாளையம், பொன்னியாறு ஓடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே, இந்த விற்பனையின் பின்னணியில் சில முக்கிய நபர்கள் இருப்பதாகவும், அவர்களால் மற்ற நபர்களை பயன்படுத்தி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான தகவல்களும் அதிகாரப்பூர்வ விசாரணை மூலம் உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.

போலீஸ் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள வீடியோவில் போலீசாருக்கு மாமூல் கொடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும், மல்லசமுத்திரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.