விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம் (CITU) சார்பில் குமரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் நடைபெறும் இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
2018-ம் ஆண்டு ஒன்றிய அரசால் ரத்து செய்யப்பட்ட PMJJBY, PMSBY குழு காப்பீட்டுத் திட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
மேலும், விசைத்தறி உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை, குறைந்தபட்ச மாத சம்பளம் ரூ.26,000, 60 வயதான தொழிலாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம், இ.எஸ்.ஐ., பி.எப்., கிராஜுவிட்டி, மருத்துவம் மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு வசதிகளை உத்தரவாதப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீத கூலி உயர்வு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், விசைத்தறி நிர்வாகம் மற்றும் ஒன்றிய, மாநில அரசுகள் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
குமரமங்கலம் பஸ் ஸ்டாப்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஈஸ்வரன் தலைமை வகித்தார். அசோகன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.