vmtalks.com ⚡ AMP

வருமான வரி ஏய்ப்பு வழக்கு: திருச்செங்கோடு தொழிலதிபருக்கு 2 ஆண்டு ஜெயில், ரூ.7.54 லட்சம் அபராதம்.

By Editor | Sep 30, 2026

வருமான வரி கணக்கில் வாடகை வருவாயை மறைத்து வரி ஏய்ப்பு செய்த வழக்கில், திருச்செங்கோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் ஆர். நடேசன் என்பவருக்கு  2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.7.54 லட்சம் அபராதமும் விதித்து கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருச்செங்கோடு வருமான வரித்துறை அலுவலர் தாக்கல் செய்த இந்த வழக்கை, கோயம்புத்தூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கே. சிவக்குமார் விசாரித்தார்.

வழக்கு விவரங்களின்படி, 2012-13 நிதியாண்டில்  நடேசன் தனது ஒரு PAN எண் மூலம் ரூ.25,89,914 வாடகை வருவாய் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த வருவாயை முறையாக வருமான வரி கணக்கில் காட்டவில்லை.

மேலும், தனது இரண்டாவது PAN எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ததுடன், அதில் மேற்கண்ட வாடகை வருவாயை மறைத்ததாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டு PAN அட்டைகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது என்றும் வழக்கில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், நேற்று (செப்டம்பர் 29, 2026) வழங்கிய தீர்ப்பில் நடேசனை குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், ரூ.7,54,000 அபராதம் செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி மூலம் கிடைக்கும் வருவாய் அரசின் நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு முக்கியமானதாக இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் சட்டப்படி கடுமையான நடவடிக்கையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.