vmtalks.com ⚡ AMP

அக்கலாம்பட்டி கல்குவாரியை மூட வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்.

By Editor | Aug 21, 2026

அக்கலாம்பட்டி பகுதியில் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரி மற்றும் கிரஷர்களால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் விவசாயம் முற்றிலும் அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, சம்பந்தப்பட்ட கல்குவாரிகளை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

திருச்செங்கோடு வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி, திருச்செங்கோடு, குமாரபாளையம் தாலுகா பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளுக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்செங்கோடு ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் லெனின் தலைமை வகித்தார். திருச்செங்கோடு தாசில்தார் ராஜா, குமாரபாளையம் தாசில்தார் பிரகாஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் முன்னிலை வகித்தனர்.

கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பாதிப்பு

கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது:

அக்கலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சில கல்குவாரிகள் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகின்றன. சிறிய அளவில் அனுமதி பெற்றுவிட்டு, பின்னர் பெரிய இயந்திரங்களை பயன்படுத்தி சுமார் 50 மீட்டர் ஆழம் வரை கற்கள் தோண்டப்படுவதுடன், அங்கேயே கிரஷர்களும் செயல்படுகின்றன.

இதனால் அருகில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகின்றன. கிரஷர்களில் இருந்து வெளியேறும் கல் மற்றும் மண் துகள்கள் விவசாய நிலங்களில் படிந்து வருவதால், மண்ணில் நுண்ணுயிர்கள் வளர்வது பாதிக்கப்படுகிறது.

மேலும், கால்நடைகளுக்கான தீவனங்களிலும் கல் மற்றும் மண் துகள்கள் படிந்து வருவதால், கால்நடைகளுக்கு தீவனம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

எனவே, உரிய அனுமதியின்றியும், விதிமுறைகளை மீறியும் செயல்படும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களை ஆய்வு செய்து உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

மேலும், சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை சுற்றி அதிகளவில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை விரைந்து அகற்றி நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

கரும்பு பயிரில் புழு தாக்குதல்

திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு பயிர்களில் இடைக்கணுப்புழு மற்றும் நுனிக்குருத்துப்புழு தாக்குதல் அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் கரும்பு விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டு, விவசாயத்தை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

முன்பு இத்தகைய புழுக்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு சார்பில் ஒட்டுண்ணிகள் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அதற்கான ஆய்வகங்கள் மற்றும் தேவையான பணியாளர்கள் இல்லாததால் அந்த திட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

ரசாயன மருந்துகள் மூலம் புழுக்களை கட்டுப்படுத்துவது செலவு மற்றும் நடைமுறை சிரமம் கொண்டதாக இருப்பதால், மீண்டும் உயிரியல் முறையில் புழுக்களை கட்டுப்படுத்துவதற்கான ஒட்டுண்ணிகளை தயாரித்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதுடன், இயற்கை வழிமுறைகள் மூலம் பயிர் நோய்களை கட்டுப்படுத்த வேளாண்மைத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதிகாரிகள் உறுதி

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்த வருவாய் கோட்டாட்சியர் லெனின் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள், கல்குவாரிகள் குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்நிலைகளை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும், கரும்பு பயிர்களை தாக்கும் புழுக்களை கட்டுப்படுத்த தேவையான நுண்ணுயிரிகள் விவசாயிகளுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அதிகாரிகளிடம் அளித்தனர்.