vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோட்டில் தொழிற்சங்கங்கள் மறியல்: 100-க்கும் மேற்பட்டோர் கைது

By Editor | Aug 10, 2026

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து, மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே ஏஐடியுசி, சிஐடியு, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, ஏஐகேஎஸ், ஐஎன்டியுசி, எஸ்.கே.எம்., யுடியுசி, எம்எல்எப் உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளையும் ரத்து செய்ய வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படியுடன் இணைக்கப்பட்ட ரூ.42 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியத்தை சட்டப்பூர்வமாக வழங்க வேண்டும், தனியார்மயமாக்கல் மற்றும் தேசிய சொத்து பணமாக்கல் திட்டத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

மேலும், சமூக பாதுகாப்பை விரிவுபடுத்த வேண்டும், பொது கல்வி மற்றும் பொது சுகாதாரத்தை உறுதி செய்ய வேண்டும், வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க வேண்டும், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தினர்.

இதைத்தொடர்ந்து அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலிருந்து தொழிற்சங்கத்தினர் பேரணியாக புறப்பட்டு, திருச்செங்கோடு இந்தியன் வங்கி முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருச்செங்கோடு நகர போலீசார், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் திருச்செங்கோடு–ஈரோடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.