அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபெற்ற சிறப்பு முகாமில், போதிய இருக்கை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான மாற்றுத்திறனாளிகள் தங்களது உதவியாளர்களுடன் பங்கேற்றனர்.
முகாமுக்கு வந்தவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. அமர்வதற்கு போதுமான நாற்காலிகள் இல்லாததால், முதியவர்கள், கைக்குழந்தைகளுடன் வந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும், குடிநீர் வசதியும் இல்லாததால் பலரும் சிரமத்திற்குள்ளாகினர்.
முகாம் மிகவும் குறுகலான பகுதியில் நடத்தப்பட்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சக்கர நாற்காலி மற்றும் ஊன்றுகோல் உதவியுடன் வந்த மாற்றுத்திறனாளிகள் முகாமுக்குள் செல்வதற்கும், மருத்துவர்களை சந்தித்துவிட்டு வெளியே வருவதற்கும் சிரமப்பட்டனர்.
கூட்ட நெரிசலில் சிக்கிய மாற்றுத்திறனாளிகள் பலர் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே உடல் ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தது வேதனையளிப்பதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர்.
வரும் காலங்களில் இதுபோன்ற சிறப்பு முகாம்களை விசாலமான இடங்களில் நடத்த வேண்டும் என்றும், முகாமுக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு போதிய இருக்கைகள், நிழற்கூரை, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சக்கர நாற்காலிகள் எளிதாக செல்லும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.