பெரியகாடு பகுதியில் உள்ள சுமார் 1,200 மீட்டர் நீளமுள்ள சாலையை சீரமைக்கக் கோரி, கடந்த காலங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் சென்னை தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து சாலையை அதிகாரிகள் நேரில் அளவீடு செய்து, சீரமைப்பதற்கான திட்ட மதிப்பீடும் தயாரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அரசு நிதி ஒதுக்காததால் சாலை சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை என்றும், நிதி ஒதுக்கப்பட்டவுடன் சாலை புதுப்பிக்கப்படும் என்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் தெரிவித்ததாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், பெரியகாடு சாலை தற்போது நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளாக சாலையை சீரமைக்க பல்வேறு அலுவலகங்களுக்கு சென்று மனு அளித்து வந்த நிலையில், தற்போது துறை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அடுத்ததாக எந்த அலுவலகத்தை அணுகுவது என்பது தெரியாமல் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அரசாணையில் “பள்ளிபாளையம் – குமாரபாளையம் – மொளசி ரோடு முதல் ஆலாம்பாளையம் பேரூராட்சி, பெரியகாடு” என குறிப்பிடப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மோசமான நிலையில் உள்ள இந்த சாலையை விரைவாக ஆய்வு செய்து, தேவையான நிதியை ஒதுக்கி சீரமைப்புப் பணிகளை தொடங்க வேண்டும். மேலும், சாலை எந்த துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை தெளிவுபடுத்தி, பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.