நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வறண்டு கிடந்த குட்டையில் பாறையின் மீது ஆண் சடலம் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட பழனிகவுண்டம்பாளையம் பகுதியில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக நீர் தேக்க குட்டை ஒன்று உள்ளது. வறட்சி காரணமாக தற்போது குட்டை தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. இந்த குட்டை பகுதியில் மது அருந்துபவர்கள் அடிக்கடி கூடுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று குட்டையில் உள்ள பாறையின் மீது அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், உயிரிழந்தவர் காவேரி நகர் பகுதியைச் சேர்ந்த தனசேகர் என்பதும், பெயிண்ட் அடிக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தனசேகர் அதிக மதுபோதையின் காரணமாக உயிரிழந்தாரா? அல்லது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.