நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய பல்சர் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
குமாரபாளையம் அருகே சேரன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சத்யா. தனியார் செல்போன் நிறுவனத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடிந்து 11 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் தனது பல்சர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன்பு நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் அதிகாலை வீட்டை விட்டு வெளியே வர முயன்றபோது, வீட்டின் வெளிப்புற கதவு தாழிடப்பட்டிருந்ததை கண்டு சத்யா அதிர்ச்சியடைந்தார். அவர் சத்தமிட்டதை தொடர்ந்து, அருகில் வசிப்பவர்கள் வந்து கதவை திறந்துள்ளனர்.
வெளியே வந்து பார்த்தபோது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த தனது புதிய பல்சர் இருசக்கர வாகனம் காணாமல் போனது தெரியவந்தது.
இதையடுத்து வீட்டின் அருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை சத்யா ஆய்வு செய்தார். அதில் அதிகாலை நேரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பல்சர் வாகனத்தை திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதுகுறித்து குமாரபாளையம் காவல் நிலையத்தில் சத்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் பகுதியில் அதிகாலையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவமும், அதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.