vmtalks.com ⚡ AMP

திருச்செங்கோடு அருகே சாலை விபத்தில் 4 மாணவிகள் உயிரிழப்பு: தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்வர் விஜய் அறிவிப்பு.

By Editor | Sep 04, 2026

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், கொன்னையார் கிராமத்தில் நேற்று (செப்.3) நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த 4 மாணவிகளின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர், குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

கொன்னையார் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி சுபிதா (19), தனது சகோதரிகளான நிவேதா (17), தனுஸ்ரீ (13) மற்றும் உறவினரான அபிநயா (12) ஆகியோரை இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றபோது, தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் நிவேதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுபிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 மாணவிகளின் உயிரிழப்பு குறித்து மிகுந்த வேதனையடைந்துள்ளதாகத் தெரிவித்த முதலமைச்சர் ஜோசப் விஜய், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.