திருச்செங்கோடு மலையில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, 5 தலைகளுடன் 60 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள ஆதிசேஷ சுவாமி தமிழகத்தில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நாகபஞ்சமி நாளில் ஆதிசேஷ சுவாமியை வழிபட்டால் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், திருமணத் தடை உள்ளிட்ட பல்வேறு தோஷங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் ஐதீகம்.
இதையொட்டி, நாகபஞ்சமி தினமான நேற்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. முன்னதாக ஆதிசேஷ சுவாமிக்கு பால், மஞ்சள், குங்குமம் மற்றும் நவதானியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பயபக்தியுடன் ஆதிசேஷ சுவாமியை தரிசனம் செய்தனர்.